கொரோனா லாக்டவுனை காரணம் காட்டி தனியார் நிறுவனங்களில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ ஊதியத்தைப் பிடிக்கவோ செய்யக் கூடாது என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24 அன்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அது இரண்டாம் கட்டமாக மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. மே 3-க்கு பிறகும் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லாக்டவுனை காரணம் காட்டி தனியார் நிறுவனங்களில் ஆட்கள் குறைப்பு, சம்பள வெட்டு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவோ கூடாது என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அருண் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

 
அந்த மனுவில், “ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியபோதும் நீட்டிப்பின்போதும் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக் கூடாது, ஊதியத்தை நிறுத்தக் கூடாது. தனியார் நிறுவனங்களின் இதுபோன்ற செயல்கள் ஊழியர்களுக்கு மனஅழுத்தத்தையும், மனஉளைச்சலையும் தரும். மேலும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வதற்கான உரிமை, பணிபுரிவதற்கான உரிமையை அது பறிக்கும் வகையில் இருப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள்  சத்தியநாராயணன், நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை மே 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.