சித்தூர் அருகே தமிழக அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த முனிகிருஷ்ணா மற்றும் குடும்பத்தினர் காரில் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். சித்தூர் மாவட்டம் நகரியை அடுத்த கன்ன மெட்டு என்ற பகுதியில் வந்தபோது காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

இந்த விபத்தில் முனிகிருஷ்ணா, குமார் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 2 பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து நகரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காருக்கு முன்னால் சென்ற வாகனம் ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது அதன் மீது மோதாமல் இருக்க காரை இடதுபுறத்தில் திருப்பிய போது விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.