சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் குடிநீர் பெற கட்டணமில்லா எண் அறிவிப்பு!
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவைப்பட்டால் 1916 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் தேவை இருக்கும் மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044-45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
"தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்” என்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் குடிநீர் கூட கிடைக்கவில்லை என்று புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மழை பாதிப்பு காரணமாக மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் அளிப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கனமழை காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்துவற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் டிசம்பர் 18ஆம் தேதி வரை அபராதத் தொகை இல்லாமல் மின் கட்டணத்தைச் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலத் தேர்தலில் வென்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா! முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு?