கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணி முதல் 31 ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

இதையடுத்து சென்னை போன்ற நகரங்களில் வேலைக்காக தங்கியிருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்றிலிருந்து கிளம்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் சென்னை முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை ஆகிய தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. விழுப்புரம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் பேருந்து நிலையங்களில் குவிந்திருக்கும் பயணிகள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரையில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.