ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியா? ஆம்ஸ்ட்ராங்? காவல் ஆணையர் அஸ்ரா கார்க் பரபரப்பு தகவல்!
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த கோகுல், விஜய், சக்தி ஆகியோரிடம் பிடித்து விசாரித்து வருகிறோம். கொலை குற்றத்தில் இவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்ட பிறகே கைது செய்யப்படுவார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை மீண்டும் விசாரணை மேற்கொள்ள போலீஸ் காவல் கேட்க உள்ளதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்
சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொலை நிகழ்ந்த 4 மணி நேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு 19 தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட 8 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணை செய்து சரியான ஆதாரங்கள் அடிப்படையில் தான் சரியான நபர்களை கைது செய்துள்ளோம்.
முதற்கட்ட விசாரணையில் சட்டப்படி கைது செய்துள்ளோம். சிசிடிவி மட்டுமின்றி ஒரு பை, டீ சர்ட், ரத்தக் கறையுடன் அரிவாள்கள் கைப்பற்றி முறைப்படி கைது செய்துள்ளோம். சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த கோகுல், விஜய், சக்தி ஆகியோரிடம் பிடித்து விசாரித்து வருகிறோம். கொலை குற்றத்தில் இவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்ட பிறகே கைது செய்யப்படுவார்கள்.
ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதற்கு பின்னனியில் ஆம்ஸ்ட்ராங் இருந்ததாக ஆற்காடு சுரேஷ் உறவினர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாக ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளது. அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை. தனியார் உணவு டெலிவரி உடை போட்டுவந்தது ஏன் அங்குள்ள கடைக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என கூறுபவர்கள் சரியான ஆதரத்தை காட்டினால் விசாரிக்க தயாராக உள்ளோம். உடல் இறுதி சடங்கு செய்வதற்க்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.