சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவும் கலந்து கொண்டார். 

இதனிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் அறைக்கு மொட்டைக் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுந்தப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உடனே கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.