தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, மேக மூட்டத்துடன் வானம் காட்சியளித்தது. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியதுடன், சுமார் ஒருமணிநேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. பகல் வேளைகளில் 2வது நாளாக தொடரும் இந்த கனமழை வண்டிச்சோலை, வெலிங்டன் உள்பட குன்னூர் தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்தது.

நாகை, நாகூர், புத்தூர், திட்டச்சேரி உள்பட பல பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால், மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். சில இடங்களில் மழை காரணமாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திருவாரூர், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களிலும், கும்பகோணம், செஞ்சி, வந்தவாசி, செங்கல்பட்டு உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.