ஆஸ்திரேலியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டி, பிஸ்கெட் பாக்கெட்டை திருடிய, ஏர்இந்தியா பைலட், சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார். இதையடுத்து அவர், அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இந்தியாவில், பொதுத் துறை நிறுவனமான, ஏர் இந்தியா நிறுவனத்தில், ஆஸ்திரேலிய நாட்டுக்கான மண்டல இயக்குனர் பதவியில் இருந்தவர் ரோஹித் பசின். பைலட்டாகவும் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு விமானம் வந்தது. அதில், ரோஹித் பசினுக்கு, பைலட்டாக வேலை பார்க்கும் பொறுப்பு, வழங்கப்பட்டது.

முன்னதாக அவர், சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது, அங்குள்ள பொருட்களை வாங்குவது போல், பார்த்து கொண்டிருந்த அவர், திடீரென யாருக்கும் தெரியாமல், அங்கு வைக்கப்பட்டு இருந்த பிஸ்கெட் பாக்கெட்டை திருடி மறைத்து வைத்து கொண்டார்.

இதை சிசிடிவி கேமராவில் பார்த்த சூப்பர் மார்க்கெட் ஊழியர், அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், உயர் அதிகாரிகள், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், பைலட் ரோஹித் பசின், பிஸ்கெட் பாக்கெட்டை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரை, அவரை அதிரடியாக, சஸ்பெண்ட் செய்து துறைரீதியாக உத்தரவிட்டனர்.