உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 52,952 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,783 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டும் என அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் எளிதில் பரவுவதை தடுக்கும் விதமாக சலூன் கடைகள் அனைத்தும் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவர் சவரத் தொழிலாளர் சங்கத் தலைவர் செல்வராஜ் சென்னையில் இருக்கும் அச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஊரடங்கு உத்தரவு காலத்தில் சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தற்போது ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு சிறு,குறு தொழில்கள் இயங்க அரசு அனுமதி அளித்திருக்கிறது. சவரத் தொழிலாளர்கள் வீட்டு வாடகை, கடை வாடகை, முன் கட்டணம் செலுத்த வழியில்லாமல் உணவுக்கு திண்டாடி ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

கடை திறப்பதற்கு எந்த மாதிரியான கட்டுப்பாடுகளை அரசு விதித்தாலும் அதை பின்பற்ற தயாராகவே இருக்கிறோம். சலூன் கடைக்கு வரும் அனைவரையும் சமூக வெளியில் நிறுத்தி ஒவ்வொரு நபருக்கும் முடி திருத்தம் செய்த பின்னர் கத்திரி, சீப்பு மற்றும் சவரம் செய்ய தேவைப்படும் அனைத்து பொருட்களையும் உரிய கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே அடுத்த நபருக்கு பயன்படுத்துவோம் என்றும் உறுதி அளிக்கிறோம். சவரத் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 நிவாரணம் தருவதாக அரசு கூறியிருக்கிறது. நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் வெறும் 14,000 பேர் மட்டுமே இருக்கின்றனர் . ஆனால் இதே தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். எனவே அனைவரையும் கருத்தில் கொண்டு ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.