சென்னை  மாநகராட்சி 147வது வட்ட முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் தேவதாஸ். அதிமுக வட்டச் செயலாளராகவும் உள்ளார். இன்று காலை தேவதாசின் மகனுக்கு, கோயம்பேடு அடுத்த மதுரவாயிலில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

இதையொட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என பல்வேறு முக்கிய பிரமுகர்களை வரவேற்கும் விதமாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் சாலையை ஆக்கிரமித்து, பெரிய அளவிலான கட்அவுட்கள், பேனர்களை வைத்துள்ளார்.

இந்த பேனர்கள், கோயம்பேடு தொடங்கி மதுரவாயல் வரையிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதிலும் அடிக்கு ஒரு கட் அவுட் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளார். இந்த திருமண விழாவுக்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களும் வருவதாக ஒவ்வொரு பிளக்ஸ் பேனர்களிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதிலும் 200 க்கும் மேற்பட்ட கட் அவுட்டுகள் உள்ளன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பிக்கும் அளவுக்கு இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.