இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சார்பாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களில் ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் கொரோனா தடுப்பு பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர் பகுதி முழுவதிலும் தூய்மை பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகின்றன. இதனிடையே சென்னையில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி அண்மையில் போராட்டம் நடத்தினர். ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னையில் மே 28ம் தேதி வரை போராட்டகள் நடத்துவதற்கும் கூட்டங்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு காவல் சட்டம் 1888 பிரிவு 41 உட்பிரிவு (2)இல் அளிக்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் போக்குவரத்துப் பகுதிகளில், சாலை தெருக்களில் கூட்டம் கூடவும், பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனித சங்கிலி அமைப்பது போன்றவற்றை நடத்தவும் 13-ந்தேதி அன்று 2 மணி முதல் 28.05.2020 வரை 15 நாட்களுக்கு தடை விதித்து ஆணையிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.