ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் இருந்து, 500 சிறப்பு  பேருந்துகள் இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பேருந்துகளை கடந்த 6 மாதமாக இயக்காமல் இருந்தது. பின்னர், தளர்வுகள் வழங்கப்பட்டதையடுத்து மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 2500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதாவது பாதிக்குப் பாதி பேருந்துகள் தான் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் 25ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. 26ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதனால் 24ம் தேதி சனிக்கிழமையாகவுள்ளது. இதனால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. எனவே பலரும் 23ம் தேதி மாலையே சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். குறிப்பாக நீண்ட தூரம் செல்ல விரும்பும் பயணிகள் அதிகமாக இருப்பார்கள்.

மேலும் ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை செய்யப்படவில்லை. ரயில் போக்குவரத்தும் குறைவாகவே உள்ளது. சிறப்பு ரயில்கள் மட்டும்தான் இயக்கப்படுகிறது. எனவே மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் செல்ல வாய்ப்புள்ளது. அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், நீண்ட தூர சிறப்பு  பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பேருந்துகள் இயங்க துவங்கியது. முதலில் குறைவான பயணிகளே பயணித்தனர். தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரும் 25ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். பயணிகளின் வருகையை பொறுத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.