அத்திவரதர் வைபவம் தொடங்கிய நாள் முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

வரதராஜ பெருமாள் கோயில் வளாகம் அருகில் உள்ள செட்டித்தெரு, வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, டோல்கேட் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சின்ன காஞ்சிபுரம், டோல்கேட், பெரியார் நகர், திருவீதிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் வெளியில் இருந்து தங்கள் பகுதிக்கு வருவதற்கும் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தால் இயக்கப்படும் மினி பஸ்களும் செட்டித்தெரு சந்திப்பிற்கு பிறகு செல்லாமல் திருப்பி விடுகின்றனர்.

வடக்கு மாடவீதி வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதால் பிரதான சாலையான வடக்கு மாடவீதியிலும் பக்தர்கள் நெரிசல் அதிகரித்துள்ளது. ஷேர் ஆட்டோக்களும் செல்ல முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், உள்ளூர் மக்கள் வெளியே செல்லமுடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.