Asianet News TamilAsianet News Tamil

வண்டல் மண் எடுக்க விவசாயியிடம் லஞ்சம்… - தாசில்தார், டிரைவர் கைது

வண்டல் மண் எடுக்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், அவரது டிரைவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

arrest thasildhar and driver
Author
Chennai, First Published Jun 20, 2019, 12:57 PM IST

வண்டல் மண் எடுக்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், அவரது டிரைவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (35), விவசாயி. இவருக்கு சொந்தமான வயல்வெளி உள்ளது. அதனை சமன் செய்வதற்காக, ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து வடிவேலு, அதற்கான அனுமதி கேட்டு செஞ்சி தாலுகா அலுவலகம் சென்றார்.

அங்கிருந்த செஞ்சி தாசில்தார் ஆதிபகவானை சந்தித்து, ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தாசில்தார், வண்டல் மண் எடுக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், அனுமதி வழங்க முடியும் என்றும், அந்த பணத்தை ஜீப் டிரைவர் கந்தசாமியிடம் கொடுக்கும்படியும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வடிவேலு, இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், வடிவேலுவிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்து, அதை தாசில்தாரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பினர்.

அதன்படி, நேற்று மதியம் செஞ்சி தாலுகா அலுவலகத்துக்கு வடிவேலு சென்றார். அங்கிருந்த தாசில்தாரின் ஜீப் டிரைவர் கந்தசாமியிடம் று, லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை வாங்கி கொண்ட காந்தசாமி, அந்த பணத்தை தாசில்தார் ஆதிபகவானிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தார் ஆதிபகவானையும், டிரைவர் கந்தசாமியையும் சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் தாசில்தார் மேஜையில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய்து விசாரித்து வருக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios