அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கொரானோ பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப்பருவதேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கிற்கு பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில்  தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், கொரோனா பரவலின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகள் மற்றும் விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு விட்டன. இந்தநிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசிக்க குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதாகவும், இதில் எந்த ஒரு விதிமுறை மீறலும் இல்லை எனவும், மாணவர்கள் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அசாதாரண சூழலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரியர் தேர்வை பொறுத்தவரை மாணவர்களுக்கு சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் மட்டுமே வழங்கப்படும் என்றும், திருப்தி அடையாத மாணவர்கள் வரும் தேர்வுகளை எழுதி தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் சொந்தமாக திட்டத்தை வகுத்துக் கொள்ள முடியும் என்றும், இது எந்த வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காது என்பதோடு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இது மீறவில்லை எனவும், பல்கலைக்கழகங்களுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய  வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.