அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில், கலை - அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேரச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்குப் பதிலளித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில், அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,இந்த விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் மொத்த அரியர் எண்ணிக்கை, 10ஆம் வகுப்பு முதல் அவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும் எனவும் நீதிபதிகள் அப்போது எச்சரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே சொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படித்தவர்களே பணியாற்றுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் எனவும் கேள்வி எழுப்பிப்பினர். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.