ADMK Status | தனித்துவிடப்பட்ட ADMK! 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காணாமல் போகுமோ?
நாடாளுமன்ற தேர்தல் களத்தில், பாஜக கூட்டணியிலிருந்து வெளிவந்த அதிமுக, இதர பெரிய கட்சிகளின் கூட்டணி கிடைக்காமல் தவித்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி விவகாரத்தில் மும்முரம் காட்டி வருகின்ற. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த ஆண்டு வரை நீடித்த அதிமுக இம்முறை இல்லை. மற்ற தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி அதிமுவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை பாஜகவுடன் கைகோர்த்துவிட்டன.
புரட்சிக் தலைவர் எம் ஜி ஆர் உயிரோடு இருந்த வரை ஒரே ஒரு தேர்தலில் தான் இரட்டை இலை வீழ்ந்தது. அதன் பின்னர் அம்மையார் ஜெயலலிதா கட்சி தலைமை ஏற்ற பின்னர், ஏற்றத்தாழவு இருந்தன. ஆனாலும் கட்சிக்கு பெரியளவில் பின்னடைவுகள் இல்லை.
ஆனால் இன்றைய அதிமுக-வின் நிலை அந்தோ பரிதாபகரமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. ஆனால் அதிமுகவோ பரிதாபகரமாக தனித்து விடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரு பிரிவுகளாக பிரிந்த அதிமுக, தற்போது பல பிரிவுகளாக சிதறுண்டு கிடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா, என்று பல பிரிவுகளாக செயல்படுகிறது. இதனிடையே, இந்த நாடாளுமன்ற தேர்தல்களத்தில் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா அணியினர் போட்டியிட போவதில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தை முடக்கி எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று நினைத்தார். அதற்காக கோவில் கோவிலாக போய் சாமியிடமும் வேண்டிக் கொண்டார். இருந்தும் அவரது பலன் வீணாகப் போனது. பாஜக-வின் கொத்தடிமை ஆக அவர்கள் பின்னே நிற்க வேண்டிய பரிதாபத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இந்த லோக்சபா மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியுடன், தேமுதிகவைத் தவிர வேறு பெரிய அரசியல் கட்சி எதுவும் கூட்டணி வைக்க முன்வரவில்லை. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாம் அந்தப் பழமொழியாக தேமுதிக உடன் வரலாம். இந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கு செலவு செய்வதற்கு பணம் பெரும் பிரச்சனையாக இருக்கும் என்பதை திண்ணம். வேட்பாளர்கள் சொந்த காசை வாரி இறைக்க மாட்டார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகளால் கட்சித் தலைமையும் பெரிய அளவில் பணம் கொடுக்க இயலாது. எனவே திமுக மற்றும் பாஜக போன்ற பெரிய கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையே அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அணியை விட்டு, மேலும் பல தலைவர்கள் ஏதோ காரணம் கூறி வெளியேறி விடுவார்கள். அதன்பின்னர், எடப்பாடி பழனிச்சாமியின் அணியும் ஒரு கேப்டனை இழந்த தேமுதிகவாக மாறிவிடும். தொடர்ந்து அதிமுக பல பிரிவுகளாக சிதறி காணாமல் போய் விடலாம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.