அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணத்தை 200 மடங்கு உயர்த்தி சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தமிழக அரசின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் அனுமதி பெற  வேண்டியது கட்டாயம். அனுமதி கட்டணம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறிப்பிட்ட அளவு வருவாய் கிடைத்தது வருகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற  அம்ரூத் ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் வருவாயை பெருக்கி கொள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகை  வைக்க கட்டணமானது கூடுதலாக  வசூலித்துக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. 

அதன்படி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணத்தை மாநகராட்சி உயர்த்தியுள்ளது. மேலும் விளம்பர பலகைகளின் அளவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் கடைகள் உள்ள சாலையிலிருந்து 3 அடிக்கு உள்ளேதான் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். 4  வழிச்சாலைகளில் 20 நீளமும், 10 அடி அகலமும் கொண்ட பலகைகளை மட்டுமே வைக்க வேண்டும். 6 வழிச் சாலைகளில் 30 அடி நீளமும் 15  அகலமும், அதற்கு மேற்பட்ட சாலைகளில் 40 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட விளம்பர பலகைகளை மட்டுமே வைக்க முடியும்.

 

பழைய சட்ட விதிகளின் படி ஒரு சதுர மீட்டருக்கு 120 முதல் 300 வரை கட்டணம் நிர்ணயம் (ஆறு மாதத்திற்கு ) செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் புதிய  சட்ட திருத்தத்தின்படி அனைத்து வகையான விளம்பர பலகைகளுக்கும் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 18 ஆயிரம் கட்டணம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணம் 200 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதேபோன்று விண்ணப்ப கட்டணமும் ரூ. 500லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகளில் உள்ள சாலைகளில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணமும்  உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சியில் விண்ணப்ப கட்டணம் ரூ. 2 ஆயிரமாகவும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளில்  விண்ணப்ப கட்டணம் ரூ.1000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாநகராட்சிகளில் உள்ள முக்கிய சாலைகளில் விளம்பர பலகை வைக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 10 ஆயிரமும், மற்ற சாலைகளுக்கு ரூ. 8 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிகளில் உள்ள பிரதான சாலைகளில் விளம்பர பலகை வைக்க ரூ. 6 ஆயிரமும், மற்ற சாலைகளில்  வைக்க ரூ. 4 ஆயிரமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டவுன் பஞ்சாயத்துகளில் உள்ள மெயின் சாலைகளில் வைக்க ரூ. 4 ஆயிரமும்,  மற்ற சாலைகளில் வைக்க ரூ. 3 ஆயிரமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.