இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், நேற்று முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாவது கட்டத்தில் 60-வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பாரத பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நேற்று மட்டும் நாடு முழுவதும் 4.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக 25 லட்சம் பேர் கோவின் ஆப்பில் பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். உடல்நலம் மோசமடையவே, அமைந்தகரையிலுள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. 95 சதவீத நுரையீரல் தொற்றுடன் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த காமராஜ் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார். 

பிப்ரவரி மாதம் 4ம் தேதி தொற்றிலிருந்து மீண்டும் வீடு திரும்பினார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். மரணத்தின் விளிம்பு வரை சென்று வெற்றிகரமாக மீண்டு வந்த அமைச்சர் காமராஜ் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், ஏற்கனவே கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டவர் என்பதாலும் அமைச்சர் காமராஜ் தடுப்பூசி செலுத்திக் கொண்டது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.