மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மக்களவையில் நேற்று மதுரை எம்பி. வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். கல்விக் கொள்கை தொடர்பாக பாஜ தன் நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சமீபத்தில், நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், பாஜக தலைவர்களும், அதன் ஆதரவாளர்களும் சூர்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவரும் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி. வெங்கடேசன் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இதுதொடர்பாக அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் நடிகர் சூர்யா கருத்து கூறியதற்கு பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரை மிரட்டவும் செய்கின்றனர். கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசே கருத்துக் கேட்கும் நிலையில், கருத்து சொன்ன ஒருவருக்கு பாஜ.வினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மக்கள் கருத்து கூற வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும்,’’ என்றார்.