கடந்த 3 மாதத்துக்கு முன் ரூ.20 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட குளம், ஒரு நாள் மழைக்கே கற்கள் பெயர்ந்து சரிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தரமாக பணிகளை செய்யவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏரிகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் தூர் வாரி சீரமைக்கப்படுகின்றன.

இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், காட்டாங்கொளத்தூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உள்பட 13 ஒன்றியங்களில் உள்ள 634 ஊராட்சிகளில் அமைந்துள்ள குளம், குட்டைகளை சீரமைக்க தலா ஊராட்சிக்கு ரூ.50 லட்சம் முதல் ₹1 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.

சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆளுங்கட்சி மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் 10 சதவீதம் கமிஷன் பெற்று கொண்டு, அந்தந்த ஊராட்சிகளில் உள்ள ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒதுக்கீடு செய்கின்றனர். மீதமுள்ள நிதியில், அதிகாரிகளுக்கு 10 சதவீதம் போய்விடுகிறது.

இதனால் குளம், குட்டை, ஏரிகள் சீரமைக்கும் பணிகளில் அதிகளவு முறைகேடு நடக்கிறது. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உரிய முறையில் ஆய்வு செய்யாததால், அவசர கதியில் தரம் இல்லாமல் பணிகள் முடிக்கப்படுகின்றன.

அதற்கான தொகையையும் ஒப்பந்ததாரர்கள் பெற்று கொள்கிறார்கள். அதே நேரத்தில் கிராமங்களில் நடக்கும் பணிகளை திட்ட இயக்குனரும், கலெக்டரும் ஆய்வு செய்வதில்லை.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்துள்ளன. அதில் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சி, ராஜாகுளிப்பேட்டையில் உள்ள குளத்தில், கடந்த 3 மாதத்துக்கு முன் சுமார் ரூ.20 லட்சத்தில் கல் மற்றும் படிக்கட்டு அமைக்கும் பணிகள் முடிந்தன.

ஆனால் அந்த பணிகள் சீராகவும், தரமாகவும் செய்யாததால், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழைக்கு, குளம் முழுவதும் இடிந்து சரிந்து, கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. சிமென்ட் சரிவர பூசாமல் தரமாக கட்டததால், சரிந்து விழுந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, மத்திய குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு சென்றனர். தற்போது மாவட்டத்தில் பல குளங்கள், ஒரு நாள் பெய்த மழைக்கே கடும் சேதமடைந்துள்ளன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை அரசு அதிகாரிகள், ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதிக்கு ஏற்றாற்போல் தரமாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற குளங்களுக்கு நிதியை விடுவிக்க கூடாது என்றனர்.