பல்லாவரம் அடுத்த பம்மலில் நேற்று அதிகாலை வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக வாடிக்கையாளர்களின் பணம் தீப்பிடிக்காமல் தப்பியது.

பல்லாவரம் அடுத்த பம்மல் கிருஷ்ணாநகரில் சிண்டிகேட் வங்கி உள்ளது. வங்கியில் இரவு பணியில் காவலர் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு, திடீரென வங்கியில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த காவலாளி உடனே தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், வங்கியில் இருந்த 3 கம்ப்யூட்டர், 4 ஏசி இயந்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக வாடிக்கையாளர்களின் பணம் வைத்து இருந்த லாக்கர் பகுதிக்கு தீ பரவவில்லை. இதனால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.