சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர்  பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பேட்டரியில் இயங்கும், 100 கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்களை, அந்தந்த மண்டலங்களுக்கு, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த 6 மண்டலங்களில், 1.75 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதனால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள், தெருக்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதி மக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் வகையில், காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், வீடுகளுக்கே சென்று, விற்பனை செய்யப்படும். இது போன்ற பணிகளில், ஆரோக்கியமான இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில், சமூக இடைவெளி பின்பற்றாத அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றை மூடி, 'சீல்' வைப்பதுடன், மூன்று மாதங்கள் திறக்க தடை விதிக்கப்படும். சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா இருமடங்காக உயர்ந்துள்ளது.  நேற்று வரை 768 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால், பெரிய நகரங்களில் தான், பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

மேலும், பேசிய அவர்,பாதுகாப்பு நலன் கருதி கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 1900 தள்ளுவண்டிகள் மற்றும் 1182 மினி டிரக்குகள் மூலம் மாநகராட்சி முழுவதும் காய்கறி விநியோகம் நடக்கிறது.  இதுவரை சென்னையில் 114 மெட்ரிக் டன் காய்கறி தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 4,65,400 டன் அளவுக்கு காய்கறிகள் தனியாக விற்பனையாகியுள்ளது. மேலும், காய்கறி, பழங்கள் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.