தமிழ்நாட்டில் மே 3ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்த நிலையில், இன்றுடன் தொடர்ச்சியாக 3 வது நாளாக பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. நேற்று முன் தினம் 447 பேருக்கும் நேற்று 434 பேருக்கும் கொரோனா உறுதியான நிலையில், இன்று 477 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இன்று 10,535 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 477 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 93 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். 384 பேர் மட்டுமே தமிழ்நாட்டிலேயே இருந்தவர்கள். அந்த 384 பேரிலும் 332 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மற்ற மாவட்டங்களை சேர்ந்த வெறும் 52 பேருக்கு மட்டுமே இன்று தொற்று உறுதியாகியுள்ளது. 

எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 359 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகபட்சமாக 939 பேர் தமிழ்நாட்டில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் ஒருநாளில் இவ்வளவு அதிகமானோர் குணமடைந்ததில்லை. தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது என்றே கூற வேண்டும். எனவே மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3538ஆக அதிகரித்துள்ளது.

இன்று 3 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், 6970 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.