தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாகவே கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்துவருகிறது. கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு கடந்த சில தினங்களாக தாறுமாறாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கோயம்பேட்டை மையமாக கொண்ட பாதிப்பு அதிகம். 

சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தினமும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. தினமும் சராசரியாக 13 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இன்று 11,584 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 798 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் 798 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8002ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத்தை அடுத்து 8000 மைல்கல்லை எட்டிய மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு. 

இந்த 798 பேரில் 538 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 4371ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்தையும் சேர்த்து மொத்த பாதிபு 3625 ஆகும். தேசியளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் உள்ளது தமிழ்நாடு. 

இன்று பதிவான 798 என்ற பாதிப்பு எண்ணிக்கைதான் தமிழ்நாட்டில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு. தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்தாலும், இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. இறப்பு விகிதம் வெறும் 0.66% என்ற அளவிலேயே உள்ளது. இன்று 92 பேர் குணமடைந்ததையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2051ஆக அதிகரித்துள்ளது.