தனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு அமல்.. - ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி அறிவிப்பு

ஆந்திராவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் அம்மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமல்படுத்தியிருக்கிறார்.

அரசு வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்துவிட்டன. இப்போதுள்ள நிலையில் அனைத்து இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு என்பது குதிரை கொம்பு கதைதான். மேலும், அரசு வேலைவாய்ப்புகளில் வேற்று மாநில இளைஞர்களும் புகுந்து கொள்கின்றனர். இதேபோல், தனியார் நிறுவனங்களிலும் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன்படி, ஆந்திராவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன் மூலம் நாட்டிலேயே தனியார்துறையில் 75 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெற்றுள்ளது.

இதற்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 70 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை கடந்த ஆண்டு அம்மாநில முதல்வர் கமல்நாத் கொண்டு வந்தார். ஆனால், தற்போது ஆந்திரா அதற்கு ஒருபடி மேலே சென்று 75 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.