தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 13 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால் தினமும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

தமிழ்நாட்டில் இன்று 13980 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. 

இன்று கொரோனா உறுதியான 600 பேரில் 399 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 3043ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு அப்டேட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் 2,16,416 பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் 4361 பேர் தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாமிடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளுடன் குஜராத் இரண்டாமிடத்தில் உள்ளது. 5980 பாதிப்புகளுடன் டெல்லி மூன்றாமிடத்தில் இருந்த நிலையில், 6000ஐ கடந்த தமிழ்நாடு, டெல்லியை ஓவர்டேக் செய்து மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. டெல்லி கொரோனா பாதிப்பில் நான்காமிடத்தில் உள்ளது.