தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இன்றுடன், தொடர்ச்சியாக நான்காவது நாளாக, ஒருநாளில் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி 527 பேருக்கும், 5ம் தேதி 508 பேருக்கும் நேற்று 771 பேருக்கும் கொரோனா உறுதியான நிலையில் இன்று 580 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 13,281 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 14,102 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

அதில், 580 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைவிட இன்றைக்கு அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று சென்னையில் அதிகபட்சமாக 316 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று பாதிப்பு குறைவுதான். நேற்று அளவிற்கு தீவிரமாக இல்லை. 

இன்று, சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக திருவள்ளூரில் 63 பேருக்கும் விழுப்புரத்தில் 45 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூரில் 24 பேருக்கும் பெரம்பலூரில் 33 பேருக்கும் கடலூரில் 32 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இன்று 31 பேர் குணமடைந்ததையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1547ஆக அதிகரித்துள்ளது. இருவர் இன்று உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. 3,822 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

அதிகமானோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை சீராக உயர்ந்து கொண்டிருக்கிறது. அதிகமான டெஸ்ட் செய்து அதிகமான பாசிட்டிவ் கேஸ்களை கண்டறிவதுதான் கொரோனா தடுப்பில் முக்கியமான நடவடிக்கை. எனவே எண்ணிக்கை அதிகமாவதால் மக்கள் பீதியடைய வேண்டாம்.