தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக தினமும் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும்தான் பாதிப்பு அதிகரித்தது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்திருந்தது. கோயம்பேட்டில் பணிபுரிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களில் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எகிறியுள்ளது. 

அதனால் பரிசோதனை எண்ணிக்கையை தமிழக அரசு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த 2 நாட்களாக அதிகபட்சம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அதிகபட்சமாக 12773 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை வெகுவாக அதிகப்படுத்தப்பட்டிருப்பதால் அதிகமான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இதுவரை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 489 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக 527 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். எனவே இறப்பு எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 0.87%ஆக உள்ளது. ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இறப்பு விகிதம் உள்ளது. இன்று 30 பேர் குணமடைந்ததால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1409ஆக அதிகரித்துள்ளது.