நாளுக்கு நாள் பெருகி வரும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் மெட்ரோ ரயில் சேவை. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் சாட்சியாக மெட்ரோ ரயில் திகழும் மெட்ரோ ரயில்சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். முழுவதும் குளிர்சாதன வசதி, போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி கொள்ளாமல் சரியான நேரத்திற்கு சென்றடைதல் என பல்வேறு நன்மைகள் மெட்ரோ ரயில் பயணத்தில் இருக்கிறது. 

எனினும் மெட்ரோ ரயில் சேவை இன்னும் சாதாரண மக்களை முழுமையாக சென்றடைய வில்லை. அதற்கு காரணமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் அவ்வப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் பல அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகிறது. கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 27 மற்றும் 28 ம் தேதிகளில் 50 சதவீத கட்டண சலுகையை பயணிகளுக்கு அளித்தது.

 

இந்த நிலையில் தற்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் இனி 50 சதவீத கட்டணசலுகை நடைமுறையில் இருக்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.