தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தினமும் 500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று, பாதிப்பு எண்ணிக்கை 500க்கு குறைவாக உள்ளது. 

கோயம்பேடு மார்க்கெட்டை மையமாக வைத்து திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பு வெகுவாக அதிகரித்துவந்த நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால் அதிகமான பாதிப்பு கண்டறியப்படுகிறது. இன்று 11,965 பரிசோதனை செய்யப்பட்டதில் 447 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு 9674ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 363 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 5637ஆக அதிகரித்திருக்கிறது.

இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 2,91,432 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனைகள் செய்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தேசிய அளவில் இதுவரை 19 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சுமார் 3 லட்சம் பரிசோதனைகள் தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ளன.

அதிகமான பரிசோதனைகளை செய்து, தொற்றுள்ளவர்களை அதிகமான அளவில் கண்டறிவதுதான், கொரோனாவை கட்டுப்படுத்த முக்கியமான நடவடிக்கை. அதை தமிழக அரசு சிறப்பாக செய்துவருகிறது.

இன்று 64 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோரின் எண்ணிக்கை 2240ஆக அதிகரித்துள்ளது. 7365 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று இருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 66ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்றைய பாதிப்பு மிகக்குறைவு. இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருப்பது, மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதை உணர்த்துகிறது.