தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மாயமான 4 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா. இவர்களது மகன் ஹரீஷ் (4). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர்களது மகன் ஹரீஷ், கீதாவின் பெற்றோர் வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்தான்.

நேற்று முன்தினம் ஹரீஷ், வீட்டின் அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்தான். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவனது சித்தி ராஜராஜேஸ்வரி, பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் சிறுவனை பற்றி எந்த தகவலும் இல்லை.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், மயாமான சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில், அந்த ஊரின் மயானம் அருகே சிறுவன் ஹரீஷ் முகத்தில் கற்களால் பலமாகத் தாக்கப்பட்டு ரத்த காயத்துடன் சடலமாக கிடந்தான். இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து உத்தமபாளையம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவன் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.