வட தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழை தற்போது கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. 

இதனால், வட தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 8 செ.மீ., அண்ணா சாலையில் 7 செ.மீ., காவேரிப்பாக்கத்தில் 5 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை, தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சராசரியாக 114 மி.மீ., பெய்திருக்க வேண்டும். ஆனால், 81 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. இது சராசரி மழையை விட 29 சதவீதம் குறைவு என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.