ஒரு வாரத்திற்குள் போர்க்கால அடிப்படையில் 3000 மருத்துவப்பணியிடங்கள் உடனடியாக நியமனம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட 188 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய மால்கள், நடைக்கடைகள் உள்ளிட்டவைகளை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 76 மாவட்டங்களையும் முடக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தை பொருத்தவரை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் தனிமைப்படுத்தப்பட்டும் வீடுகளில் தங்க வைக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஒரு வாரத்தில் போர்க்கால அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் 500 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், 1,500 லேப் டெக்னிசியன்கள், 1000 செவிலியர்களையும் நியமிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.