ஷட்டரைத் தொட்டதும் ஷாக்... மளிகைக் கடைக்காரர் மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் திருடும் அடையாளம் தெரியாத நபர்களின் விஷமச் செயலால் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
புளியந்தோப்பில் உள்ள தனது பலசரக்குக் கடையின் மெட்டல் ஷட்டர் கேட்டை சனிக்கிழமை காலை திறக்க முயன்ற வியாபாரி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
29 வயதாகும் கோபி சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் விஓசி நகர் 6வது தெருவில் வசிப்பவர். தனது மனைவி, தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்த இவர் வீட்டுக்கு அருகிலேயே மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார்.
சனிக்கிழமை காலை, வழக்கம் போல கடையைத் திறக்கச் சென்றுள்ளார். கடையின் ஷட்டரைத் தூக்கும்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. கோபியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் கோபியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.
கள்ளத் தொடர்பைக் கண்டித்த மகனை கத்தியால் குத்திய தாயின் முன்னாள் காதலன்
இதுகுறித்து புளியந்தோப்பு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கோபியின் வீட்டின் அருகே உள்ள மின்சாரப் பெட்டியில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் மின்சாரம் திருடுவதற்காக இழுத்த வயர்கள், ஷட்டர் மீது விழுந்திருப்பதாவும், இதை அறியாமல் ஷட்டரைத் தொட்ட கோபி மின்சாரம் தாக்கி பலியானதாவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோபிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவர் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வண்டலுார் உயிரியல் பூங்காவில் மாணவர்களுக்கு சம்மர் கேம்ப் திட்டம்