தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை கடந்த சில நாட்களாக அதிகரிக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்று முன் தினம் 203 பேரும் நேற்று 231 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியான நிலையில், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் தமிழ்நாட்டில் பாதிப்பு 200ஐ கடந்திருக்கிறது. 

இன்று சென்னையில் 203 பேருக்கு உட்பட மொத்தம் 266 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 203 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1458ஆக அதிகரித்துள்ளது. 

நேற்றுதான் முதன்முறையாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டன. இன்று மொத்தம் 10,584 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 266 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகமானோருக்கு பரிசோதனை செய்வதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

அதிகமானோருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு அதிகமான பாசிட்டிவ் கேஸ்களை கண்டறிய வேண்டும். அப்படி செய்தால் தான் கொரோனாவை தடுக்கவும் விரட்டவும் முடியும். எனவே அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதனால் அதிகமான பாசிட்டிவ் கேஸ்கள் வருவது இயல்புதான். அதனால் மக்கள் பீதியடைய தேவையில்லை. 

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 49 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் தமிழகத்தில் உள்ளன. அதனால்தான் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இன்று ஒரே நாளில் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1379ஆக அதிகரித்துள்ளது. 1611 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்தாலும், தினமும் அதிகமானோர் குணமடைந்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த அதேவேளையில், குணமடைவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

37,206 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 40 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.