உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 834பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 19பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. அண்மையில் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தில் இருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆறுதல் தரும் செய்தியாக தமிழக இளைஞர் ஒருவர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தற்போது பூரணமாக குணமடைந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பரிசோதனைகளின் முடிவுக்கு பிறகு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் அவர் மேலும் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட இருக்கிறார். இதற்காக பணியாற்றிய மருத்துவ குழுவினரை பாராட்டுமாறு மக்களுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.