தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. சென்னையில் மட்டும்தான் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக தினமும் தமிழ்நாட்டில் உறுதியாகும் பாதிப்பு எண்ணிக்கையில் பெரும்பாலான பாதிப்பு சென்னையில் தான் உறுதியாகிறது.

சென்னையில் திருவிக நகர் மற்றும் ராயபுரம் ஆகிய இரண்டு மண்டலங்களிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது. தமிழ்நாட்டில் பரிசோதனை எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தீவிரமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் சராசரியாக 7000 பரிசோதனைகள் செய்யப்பட்டுவந்த நிலையில், நேற்று ஒரேநாளில் சுமார் 10 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் நேற்று என்றைக்கும் இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்தது. நேற்று 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 2323ஆக இருந்தது. 

இந்நிலையில், இன்று மேலும்  203  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருப்பதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை  2526ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில்  9615 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 203 பேரில் 176 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1082ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. அதனால் பீதியடைய தேவையில்லை. இன்று 98 வயது முதியவர் ஒருவர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அதனால் இறப்பு எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமரித்தாலும் அதிகமானோர் குணமடைந்து வருவதும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும் ஆறுதலான விஷயம்.