இலத்தூர் ஒன்றியத்தில், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாததால், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன மாணவர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், விரைந்து நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

இலத்தூர் ஒன்றியம், பவுஞ்சூரில் கடந்த, 2015ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திருவாதூர் பகுதியில் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் உருவாக்க உத்திரவிட்டிருந்தார். அதன்படி, திருவாதூர் ஊராட்சியில் ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனத்திற்கென சொந்த கட்டிடம் இல்லாததால் அவ்வூராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் ஒரு வகுப்பறையில் அந்நிறுவனம் இயங்கி வருகிறது.

தற்போது, இந்த நிறுவனத்தில் மதுராந்தகம், சித்தாமூர், இலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த மேல்நிலைப்பள்ளியில் குடிநீர், கழிப்பறை பிரச்னைகள் இருக்கும் சூழலில் பயிற்சி மாணவர்கள் குடிநீருக்கும், கழிப்பறைக்கும் வெளியே சென்று வரும் அவலநிலை உள்ளது.

இந்நிறுவனத்திற்கென, அதே ஊராட்சி பகுதியில் சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளி கல்வித்துறை சார்பில், அதே பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே ரூ.2 கோடி செலவில் ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் கட்டிடம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

8 வகுப்பறைகள், ஆய்வு கூடம், ஆலோசனை கூடம், உணவு கூடம், சமையல் மற்றும் கழிப்பறைகள் கூடிய இக்கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்தாண்டு நிறைவடைந்தது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இக்கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பயிற்சி மாணவர்கள் பள்ளியிலேயே படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பயிற்சி மாணவர்களும் எப்போது சொந்த கட்டிடத்தில் அமர்ந்து படிக்க போகிறோம் என்று ஆவலுடன் காத்துள்ளனர். எனவே, கட்டி முடிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தை உடனே திறக்க வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயிற்சி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.