திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மாநகராட்சியின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில் உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில், நகராட்சிகளாக இருக்கும் தாம்பரம், ஆவடி, ஆகியவற்றை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கான பரிந்துரைகளும், மாநகராட்சியாக்கத் தேவையான அம்சங்களும் சம்மந்தப்பட்ட நகராட்சிகளில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அவற்றை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. 

இந்நிலையில், பணிகள் முடிவடைந்து ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சி, நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், அயபாக்கம், வானகரம் உள்ளிட்ட 11 கிராம பஞ்சாயத்துகள் அடங்கும். இதன் மூலம், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்து உள்ளது.