காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், 15 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு வழங்காமல், கர்நாடக அரசு பாக்கி வைத்துள்ளது. விரைவில் தண்ணீர் கிடைக்குமா என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

தமிழகத்தின் தேவைக்கு கர்நாடகா ஜூலை மாதம், 31 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதைதொடர்ந்து, கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை 17.24 டி.எம்சி நீர் வந்து சேர வேண்டும். ஆனால் இதுவரை 2.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்துள்ளது. 14.99 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைய துவங்கியுள்ளது. அங்குள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கேஆர்எஸ் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து, தமிழகத்தின் தேவைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அந்த மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளால் தமிழக எதிர்க்கட்சிகளின் ஆதரவு குமாரசாமிக்கு தேவைப்படுகிறது.

தண்ணீரை திறந்து விடாமல் தமிழக அரசியல் கட்சிகள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் இங்கு பிரச்னை ஏற்படும். இதனால், தமிழக மக்களின் வாயை அடைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக இந்த விரைவில் தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இம்மாதம், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடக்க உள்ளது. இதில் கர்நாடகா நிலுவை வைத்துள்ள நீரை பெறுவதற்கும், மாத ஒதுக்கீடான 45.93 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிடவும் ஆணையத்திடம் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட இருக்கிறது.