தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இயக்குனர் புவியரசன் கூறுகையில், தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலையிலோ அல்லது இரவு வேளையிலோ லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டி.ஜி.பி. அலுவலகம், சேலத்தில் தலா 5 செ.மீ., சென்னை நகர், சங்கராபுரம், சோழவரத்தில் 4 செ.மீ., சென்னை விமான நிலையம், அண்ணா பல்கலைக்கழகம், மாதவரம், செங்குன்றம், ஏற்காடு, வால்பாறை, சின்னக்கல்லாரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.