சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு நேற்று 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா உறுதியான 231 பேரில், 174 பேர் சென்னையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மொத்தம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,257 ஆக  உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள மண்டலங்களான திருவிக நகர், ராயபுரம், அண்ணாநகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு தீவிரமாக உள்ளது. இதனால், தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை அங்கு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரும் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து, அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.