சென்னை ஐஐடியில் மேலும் 33 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்று ஐஐடி சென்னை. நாடு முழுக்க மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் இங்கு மாணவர்கள் வருகிறார்கள். உலகம் முழுக்க உள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இங்கு வெளிநாட்டை சேர்ந்த யாரும் தற்போது தங்கியிருந்து பயிலவில்லை என்ற போதிலும் கூட திடீரென கொரோனா வைரஸ் பரவல் அங்கு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வருகிறது. விடுதிகளில் வசிக்கும் 774 மாணவர்களில் இதுவரை 408 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  சென்னை ஐஐடியில் மேலும் 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 22 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உரிய சிகிச்சை வழங்கப்படும். 

ஐஐடி மாணவர்களுக்கு கொரோனாவால் அச்சம் கொள்ள தேவையில்லை. உணவு உட்கொள்ளும் இடத்தில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே விடுதியில் தங்கி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அலட்சியம் வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.