தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 13ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த நிலையில், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக எகிறிவருவதால் தமிழ்நாட்டில் பாதிப்பு தினமும் 100க்கு மேல் பதிவாகிவருகிறது. 

நேற்று தமிழ்நாட்டில் 121 பேருக்கு கொரோனா உறுதியானதில், 103 பேர் சென்னை. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 7886 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 104 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 

எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 2162ஆகவும் சென்னையில் 768ஆகவும் அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில் அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர். அதுமட்டும்தான் ஒரே ஆறுதலாக உள்ளது. இன்று 82 பேர் குணமடைந்திருப்பதால், தமிழ்நாட்டில் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1210ஆக அதிகரித்துள்ளது. 922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் 30580 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 48 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே 41 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் இருந்த நிலையில், இன்று கூடுதலாக 3 ஆய்வகங்களுக்கு அனுமதி பெறப்பட்டிருப்பதால், 44 ஆய்வகங்களாக அதிகரித்துள்ளது. எனவே வரும் நாட்களில் இன்னும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்ய முடியும்.

கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 7000க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுவரும் நிலையில், தினமும் 10 ஆயிரம் சோதனைகளை செய்யுமளவிற்கு ஆய்வகங்களையும் பரிசோதனை வசதிகளையும் அதிகரித்துவருகிறது தமிழ்நாடு அரசு.