அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இங்கே சுமார் 1500 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் வேதியல் ஆசிரியராக ஆரோக்கியநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஆரோக்கிய நாதன் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பள்ளி வளாகத்தில் பொது எந்திரவியல் மாணவர்கள் சிலர் ஆரோக்கியநாதன் பாடம் எடுத்துக் கொண்டிருந்த வகுப்பு மாணவிகளை கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆரோக்கியநாதன் அந்த மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல ஆசிரியர் ஆரோக்கியநாதன் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த பொது எந்திரவியல் மாணவர்கள் அஜித்குமார், அபிமன்யு, பூபாலன், சக்திவேல், சூரியமூர்த்தி, ஜீவா ஆகியோர் ஆரோக்கிய நாதனை அவதூறாகப் பேசியதுடன் ஆசிரியர் என்றும் பாராமல் சக மாணவர்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு பள்ளியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் வகுப்பில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

தகவலறிந்த தலைமை ஆசிரியர் உடனடியாக விசாரணையில் ஈடுபட்டார். இதனிடையே ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியில் பயிலும் மற்ற மாணவ மாணவிகள் பள்ளிக்கு எதிரே இருக்கும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக ஜெயங்கொண்டம் காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். அங்கு பள்ளி முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து கல்வி மாவட்ட அலுவலர் பள்ளிக்கு வந்து மாணவர்களின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் 6 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து 14ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஆலோசனை செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.