பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை சாதனை படைத்து வருகிறது. கோடிகளில் விற்பனையாகும் டாஸ்மாக் சரக்கு பாட்டிலுக்குள் குட்டி பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர் தன்னுடைய மாமானர் வீட்டில் வசித்து வருகிறார். 

சுத்தமல்லியில் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் சுரேஷ் அங்குள்ள டாஸ்மாக் கடையில் குவாட்டர் சரக்கு பாட்டில் வாங்கி மது அருந்தியுள்ளார். பாதி சரக்கை கிளாஸில் ஊற்றிக் குடித்த சுரேஷ், மீதி சரக்கை ஊற்றும் போது அதற்குள் குட்டி பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து உறவினர்களிடம் தகவல் அளித்த சுரேஷ், சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். 

இதனையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுரேஷ் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது பாட்டிலில் பாம்பு இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டு பரவி வருகிறது.