மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட அழுகிய வெங்காயங்கள்..! அதிர்ச்சி தரும் தகவல்..!
அரியலூர் அருகே மூட்டைகணக்கில் அழுகிய வெங்காயங்கள் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டதால், வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. உச்சபட்சமாக ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்க்கு சென்றது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வெங்காயத்தை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். உணவகங்களிலும் விலை உயர்வால் வெங்காய உபயோகங்கள் குறைக்கப்பட்டன.
இந்தநிலையில் வெங்காய விலை உயர்வை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தட்டுப்பாட்டை போக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைகள், குடோன்கள் போன்ற இடங்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனவும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே மூட்டை மூட்டையாக அழுகிய நிலையில் வெங்காயங்கள் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் இருக்கிறது மகிமைபுரம் கிராமம். இங்கு சாலையோரத்தில் 10 மூட்டைகளில் 50 கிலோ எடைகொண்ட வெங்காயங்கள் அழுகிய நிலையில் கொட்டப்பட்டுள்ளன. வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்த வந்த நிலையில் அதை சில வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ளனர். அவை அழுகி போய்விடவே சோதனைக்கு பயந்து சாலையோரத்தில் வீசியுள்ளனர்.
வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்துவரும் நிலையில் அழுகி போன வெங்காயங்கள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.