2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான தோனி, அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார். அதன்பிறகு தோனியின் இடம் ரிஷப் பண்ட்டிற்குத்தான் என்பது உறுதியாகிவிட்டது. 

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே டாப் ஆர்டர்களை சார்ந்தே இருந்துவருகிறது. மிடில் ஆர்டர்கள் தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்டை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற பேச்சும் உள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட், அந்த வாய்ப்பை ஓரளவிற்கு பயன்படுத்தி கொண்டார். இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், உலக கோப்பைக்கு முன் இந்திய அணி சுமார் 25 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. எனவே இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை சேர்க்கலாம். உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவது அவருக்கு நல்ல படிப்பினையை கொடுக்கும் என ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையில் தோனி தான் ஆடுவார் என்றாலும் இந்திய அணியின் உலக கோப்பை ஓய்வறை ரிஷப் பண்ட்டிற்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும் என்பதே ஜாகீர் கானின் கருத்து.