அண்மைக்காலமாக இந்தியா ஏ அணியில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து தனது திறமையை பலமுறை நிரூபித்துவிட்ட போதிலும் மயன்க் அகர்வாலுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதேபோன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த மயன்க் அகர்வாலுக்கும் ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒருசில வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது, ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் பலருக்கும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு வழங்கப்படாமல், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற்றிருந்த மயன்க் அகர்வாலுக்கும் ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்காமல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

ஒரு வீரரின் திறமையை களத்தில் நிரூபிக்க வாய்ப்பு கொடுக்காமலேயே புறக்கணிப்பது என்பது மிகப்பெரிய கொடுமை. அந்த கொடுமை கருண் நாயருக்கும் மயன்க் அகர்வாலுக்கும் நேர்ந்துள்ளது. 

இந்நிலையில், மயன்க் அகர்வால் குறித்து பேசியுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், அகர்வாலை ஆடவைக்காதது நல்லதாக தெரியவில்லை. அணியில் இடம்பெற்றிருக்கும் ஒரு வீரருக்கு அவரது திறமையை நிரூபிக்க ஆடும் லெவனில் வாய்ப்பே கொடுக்கப்படாதது வருத்தமான விஷயம். அவர் அணியில் இடம்பெற்று சரியாக ஆடாமல் அந்த நாள் அவருக்கு கெட்ட நாளாக அமைந்தாலும் பரவாயில்லை. ஆனால் அணியில் ஆடவே இல்லை என்பது மிகப்பெரிய கொடுமை. மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்படாதது அவரது மனதை புண்படுத்தும். மேலும் அவர் மனதில் பல சிந்தனைகள் ஓடும். நாம் டிரிங்ஸ் முறையாக எடுத்து செல்லவில்லையா? என்றெல்லாம் கூட சிந்திக்க வைக்கும். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மிகவும் மோசமான சம்பவம் என்று ஜாகீர் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.